Thursday 19 September 2013

ஜப்பான் ஓபன் பாட்மிண்டன்: சிந்து, பவார் முன்னேற்றம்

ஜப்பான் ஓபன் பாட்மிண்டன்: சிந்து, பவார் முன்னேற்றம்

 

இந்தியாவின் நட்சத்திர வீராங்கனையாக உருவெடுத்து வரும் பி.வி.சிந்து ஜப்பான் ஓபன் பாட்மிண்டன் போட்டியின் 2ஆம் சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
ஆடவர் பிரிவில் ஆனந்த் பவார், அஜய் ஜெய்ராம் மற்றும் ஸ்ரீகாந்த் ஆகியோரும் முதல் சுற்றில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்குத் தகுதி பெற்றனர்.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இப்போட்டி செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இத்தொடரில் சாய்னா நெவால் மற்றும் பாருபள்ளி காஷ்யப் ஆகிய முன்னணி வீரர்கள் பங்கேற்கவில்லை.
மகளிர் முதல் சுற்றில் விளையாடிய சிந்து 21-12, 21-13 என்ற நேர் செட்களில் ஜப்பானைச் சேர்ந்த யுகினோ நகாயை வீழ்த்தினார். மகளிர் 2ஆவது சுற்று ஆட்டம் வியாழக்கிழமை நடைபெறுகிறது.
ஆடவர் சுற்றில் ஆனந்த் பவார் 21-17, 7-21, 21-18 என்ற செட் கணக்கில் இந்தோனேசியாவைச் சேர்ந்த சோனி த்வி கன்கோரோவை போராடி தோற்கடித்தார். லண்டன் ஒலிம்பிக்கில் கன்கோரா வெண்கலம் வென்றது குறிப்பிடத்தக்கது.
மற்றொரு ஆட்டத்தில் தாய்லாந்து கிராண்ட்ப்ரீயில் பட்டம் வென்ற ஸ்ரீகாந்த் 22-20, 22-24, 21-18 என்ற செட் கணக்கில் தரவரிசையில் 22ஆவது இடத்தில் உள்ள ஜப்பானைச் சேர்ந்த ஷோ சசாகியை வென்றார். இவர், தனது அடுத்த சுற்றில் தரவரிசையில் 2ஆம் இடத்தில் உள்ள சீனாவின் லாங் செனை எதிர்கொள்ள உள்ளார்.
அஜய் ஜெய்ராம், 21-11, 21-18 என்ற செட் கணக்கில் சீன தைபேயின் தியென் சென் செüவை தோற்கடித்தார்.
மற்ற இந்திய வீரர்களான செüரவ் வர்மா மற்றும் சாய் பிரணீத் ஆகியோர் முதல் சுற்றில் தோல்வியடைந்தனர்.

keyword:Tamil daily News | Tamilnadu newspaper

No comments:

Post a Comment