Thursday 19 September 2013

சாம்பியன்ஸ் லீக் தகுதிச்சுற்று ஒடாகோ அணிக்கு 2-வது வெற்றி

சாம்பியன்ஸ் லீக் தகுதிச்சுற்று ஒடாகோ அணிக்கு 2-வது வெற்றி

 

சாம்பியன்ஸ் லீக் தகுதிச்சுற்று ஆட்டத்தில் கந்துரதா மரூன்ஸ் அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஒடாகோ அணி வீழ்த்தியது. இதன்மூலம் தகுதிச்சுற்றில் ஒடாகோ அணி இரண்டாவது வெற்றியை பதிவு செய்துள்ளது.
சாம்பியன்ஸ் லீக் டி20 தொடரில் விளையாட தகுதிச்சுற்றுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் கந்துரதா மரூன்ஸ் (இலங்கை) மற்றும் ஒடாகோ (நியுசிலாந்து) அணிகளுக்கு இடையேயான ஆட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
இதில் ஒடாகோ அணி டாஸ் வென்று, பீல்டிங்கை தேர்வு செய்தது. கந்துரதா மரூன்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் தரங்கா மட்டும் நிலைத்து நின்று அணியின் ஸ்கோரை உயர்த்தினார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகினர். 20 ஓவர் முடிவில், 9 விக்கெட் இழப்புக்கு 154 ரன்கள் எடுத்தது.
அதையடுத்து, 155 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற ஒடாகோ அணி களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் விரைவில் ஆட்டமிழந்தாலும், அடுத்து வந்த டென் டெஸ்சேட் அபாரமாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். அவர் 32 பந்துகளில் 64 ரன்கள் எடுத்தார்.
இதில் 5 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள் அடங்கும். இறுதியில் ஒடாகோ அணி 18 ஓவரிலேயே 4 விக்கெட்டை மட்டும் இழந்து வெற்றி இலக்கை எட்டியது. இதன்மூலம் தகுதிச்சுற்றுப் போட்டியில் தொடர்ந்து 2ஆவது வெற்றியை அந்த அணி பதிவு செய்தது.

keyword:Tamil daily News | Tamilnadu newspaper

news:dinamani.com

ஜப்பான் ஓபன் பாட்மிண்டன்: சிந்து, பவார் முன்னேற்றம்

ஜப்பான் ஓபன் பாட்மிண்டன்: சிந்து, பவார் முன்னேற்றம்

 

இந்தியாவின் நட்சத்திர வீராங்கனையாக உருவெடுத்து வரும் பி.வி.சிந்து ஜப்பான் ஓபன் பாட்மிண்டன் போட்டியின் 2ஆம் சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
ஆடவர் பிரிவில் ஆனந்த் பவார், அஜய் ஜெய்ராம் மற்றும் ஸ்ரீகாந்த் ஆகியோரும் முதல் சுற்றில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்குத் தகுதி பெற்றனர்.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இப்போட்டி செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இத்தொடரில் சாய்னா நெவால் மற்றும் பாருபள்ளி காஷ்யப் ஆகிய முன்னணி வீரர்கள் பங்கேற்கவில்லை.
மகளிர் முதல் சுற்றில் விளையாடிய சிந்து 21-12, 21-13 என்ற நேர் செட்களில் ஜப்பானைச் சேர்ந்த யுகினோ நகாயை வீழ்த்தினார். மகளிர் 2ஆவது சுற்று ஆட்டம் வியாழக்கிழமை நடைபெறுகிறது.
ஆடவர் சுற்றில் ஆனந்த் பவார் 21-17, 7-21, 21-18 என்ற செட் கணக்கில் இந்தோனேசியாவைச் சேர்ந்த சோனி த்வி கன்கோரோவை போராடி தோற்கடித்தார். லண்டன் ஒலிம்பிக்கில் கன்கோரா வெண்கலம் வென்றது குறிப்பிடத்தக்கது.
மற்றொரு ஆட்டத்தில் தாய்லாந்து கிராண்ட்ப்ரீயில் பட்டம் வென்ற ஸ்ரீகாந்த் 22-20, 22-24, 21-18 என்ற செட் கணக்கில் தரவரிசையில் 22ஆவது இடத்தில் உள்ள ஜப்பானைச் சேர்ந்த ஷோ சசாகியை வென்றார். இவர், தனது அடுத்த சுற்றில் தரவரிசையில் 2ஆம் இடத்தில் உள்ள சீனாவின் லாங் செனை எதிர்கொள்ள உள்ளார்.
அஜய் ஜெய்ராம், 21-11, 21-18 என்ற செட் கணக்கில் சீன தைபேயின் தியென் சென் செüவை தோற்கடித்தார்.
மற்ற இந்திய வீரர்களான செüரவ் வர்மா மற்றும் சாய் பிரணீத் ஆகியோர் முதல் சுற்றில் தோல்வியடைந்தனர்.

keyword:Tamil daily News | Tamilnadu newspaper

தொடரை கைப்பற்றுமா இந்தியா ஏ?

தொடரை கைப்பற்றுமா இந்தியா ஏ?

மேற்கிந்தியத் தீவுகள் ஏ அணியுடன் இறுதி ஒருநாள் ஆட்டத்தில் இந்தியா ஏ அணி வியாழக்கிழமை மோத உள்ளது.
இந்தியா ஏ மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் ஏ அணிகளுக்கு இடையே மூன்று ஒரு நாள் ஆட்டத்தொடர் பெங்களூரில் நடைபெற்று வருகின்றன.
முதல் ஆட்டத்தில் இந்தியா ஏ அணியும், 2ஆவது ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகள் ஏ அணியும் வெற்றிப் பெற்றன. இந்நிலையில் 3ஆவது மற்றும் இறுதி ஆட்டம் வியாழக்கிழமை நடைபெற உள்ளது. இரு அணி வீரர்களும் தொடரை கைப்பற்றும் நோக்கத்துடன் விளையாடுவார்கள் என்பதால் ஆட்டம் விறுவிறுப்புடன் இருக்கும்.
மேற்கிந்தியத் தீவுகள் ஏ அணியில் கார்டர், பௌல், கும்மின்ஸ் போன்றோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்தியா ஏ அணியில் கேப்டன் யுவராஜ் மட்டுமே நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். பந்துவீச்சிலும் வினய்குமார் மட்டுமே தொடர்ந்து விக்கெட் எடுத்து வருகிறார். கடந்த ஆட்டத்தில் பீல்டிங் சொதப்பலாக இருந்ததை யுவராஜ் ஒப்புக்கொண்டார். எனவே, இந்த ஆட்டத்தில் அந்த தவறுகளை திருத்தி விளையாடினால் இந்தியா ஏ அணி தொடரை கைப்பற்ற வாய்ப்புள்ளது.

keyword:Tamil daily News | Tamilnadu newspaper

 

சச்சினுடன் ஓய்வு குறித்து ஆலோசிக்கவில்லை


சச்சினுடன் ஓய்வு குறித்து ஆலோசிக்கவில்லை

 

கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருடன், அவரது ஓய்வு குறித்து ஆலோசிக்கவில்லை என்று தேர்வுக் குழுவின் தலைவர் சந்தீப் பாட்டீல் தெரிவித்துள்ளார்.
சச்சின் 198 டெஸ்ட் போட்டிகளை விளையாடியுள்ளார். மேலும் 2 டெஸ்ட் போட்டிகளை விளையாடினால், 200 டெஸ்ட் போட்டிகளை விளையாடிய முதல் வீரர் என்ற சாதனையை அவர் புரிவார்.
வரும் நவம்பர் மாதம், மேற்கிந்தியத் தீவுகள் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டித் தொடர்களில் விளையாட உள்ளது. இந்த டெஸ்ட் தொடரில் சச்சின் விளையாடினால் அவர் சாதனை புரிவார் என்றும், இத்தொடருடன் அவர் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெற்று விடுவார் என்று கூறப்பட்டு வருகின்றது. ஒருநாள் போட்டியில் இருந்து அவர் ஏற்கெனவே ஓய்வு பெற்று விட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், தேர்வுக் குழு உறுப்பினர் ஒருவர் சச்சினை சந்தித்ததாகவும், அப்போது அவரது ஓய்வு குறித்து ஆலோசிக்கப்பட்டதாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. அந்த உறுப்பினர் பாட்டீல் என்றும் கூறப்பட்டது.
இது குறித்து பிடிஐ செய்தியாளரிடம் பாட்டீல் கூறியது:
சச்சினை சந்திப்பது எப்போதும் சிறந்தது. ஆனால், கடந்த 10 மாதங்களாக அவரை நான் சந்திக்கவில்லை. அவரை தொடர்புகூட கொள்ளவில்லை. அவரும் என்னைத் தொடர்பு கொள்ளவில்லை. ஓய்வு குறித்து அவரிடம் ஆலோசிக்கப்பட்டதாக வந்த செய்திகள் அபத்தமானது என்று தெரிவித்தார்.
பிசிசிஐ மறுப்பு: சச்சினிடம் ஓய்வு பெறுமாறு பாட்டீல் கூறியதாக வெளிவந்த செய்திகளை பிசிசிஐ புதன்கிழமை மறுத்துள்ளது.
இது குறித்து பிசிசிஐ மூத்த அதிகாரி ராஜீவ் சுக்லா கூறுகையில், "ஊடகங்களில் வெளிவந்த செய்திகள் உண்மை இல்லை. இது குறித்து சச்சின் மற்றும் பாட்டீலிடம் பேசினோம். இருவரிடையேயும் அதுபோன்ற (ஓய்வு) பேச்சுவார்த்தை நடைபெறவில்லை என்று தெரிய வந்தது' என்று தெரிவித்தார்.

keyword:Tamil daily News | Tamilnadu newspaper