Friday 29 November 2013

மின் உற்பத்தி: காங்கிரஸ் - திமுக கூட்டுச் சதி என்பதை நிரூபிக்க முடியுமா?


"மின் உற்பத்தியைக் குறைக்க காங்கிரஸ் - திமுக கைகோர்த்து கூட்டுச் சதி செய்கிறது' என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளதை, "அவரால் நிரூபிக்க முடியுமா?' என்று திமுக தலைவர் கருணாநிதி சவால் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
ஏற்காடு இடைத்தேர்தல் பிரசாரத்தின்போது மின்வெட்டுப் பிரச்னைக்கு முக்கியத்துவம் கொடுத்து முதல்வர் ஜெயலலிதா பேசியுள்ளார்.
மத்திய அரசு நிறுவனங்களின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள மின் உற்பத்தி நிலையங்களில்தான் சொல்லி வைத்தாற்போல் ஒரே சமயத்தில் கோளாறுகள் ஏற்பட்டுள்ளன என்று முதல்வர் குற்றம்சாட்டியுள்ளார். இது சதி என்றும் அவர் கூறியுள்ளார்.
ஒரு முதல்வராக இருப்பவர் பொறுப்புணர்ந்து பேச வேண்டும்.
மின் உற்பத்தியை எந்த அரசும் சதி செய்து குறைக்க முன் வராது. அதற்கு யாரும் துணை போக மாட்டார்கள்.
மின் உற்பத்தியைக் குறைக்கக் கூறி, மத்திய அரசிடம் யாராவது கேட்க முடியுமா?
மத்திய அரசின் கட்டுப்பாட்டின்கீழ் உள்ள மின் உற்பத்தி நிலையங்களில் ஆண்டுதோறும் மின் தேவை குறைவாக உள்ள மழைக் காலங்களில் மேற்கொள்ளப்படும் பராமரிப்பு பணிகளால்தான் மின் உற்பத்தி குறையும்.
இந்தப் பராமரிப்பு பணி என்பதும் திடீரென செய்யப்படுவதில்லை.
ஒவ்வோர் ஆண்டும் குறைந்தபட்சம் 20 நாள்களுக்கு பராமரிப்பு பணி மேற்கொள்வதற்காகவே மின் உற்பத்தி நிறுத்தப்படும்.
நிலக்கரி தட்டுப்பாடு: மின்சாரம் தயாரிக்கத் தேவையான நிலக்கரி மற்றும் நாப்தா ஆகியவற்றுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது என்றும். தேவையான நிலக்கரியை மத்திய அரசு வழங்கவில்லை என்றும் ஜெயலலிதா கூறியுள்ளார்.
வடசென்னை, மேட்டூர் மின் நிலையங்களுக்கு 90 லட்சம் டன் நிலக்கரி தேவை. மத்திய அரசு 37 லட்சம் நிலக்கரிதான் வழங்க வாக்குறுதி அளித்துள்ளது.
தமிழகத்துக்கு தேவையான நிலக்கரியை வடஇந்தியாவில் உள்ள இரண்டு சுரங்கங்களில் வெட்டி எடுத்துக்கொள்ள மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
சத்தீஸ்கரில் சுரங்கப் பணி நடைபெற்று வருகிறது.
ஆனால் ஒடிசா மாநிலத்தில் மந்தாகிணி சுரங்கப் பணியின் முன்னேற்றத்தில் தமிழக அரசு அதிக அக்கறை காட்டவில்லை. அதனால்தான் நிலக்கரி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்பதே உண்மை.
நிரூபிக்கத் தயாரா? மின் உற்பத்தியில் காங்கிரஸ் - திமுக கைகோர்த்து தமிழக மக்களைப் பழிவாங்குவதாக பெரிய குற்றச்சாட்டை முதல்வர் கூறியுள்ளார்.
ஜெயலலிதாவுக்கு சவால் விட்டுக் கேட்கிறேன்.
மின் உற்பத்தி நிறுவனங்களைப் பற்றி நானோ (கருணாநிதி) திமுகவினரோ மத்திய அரசில் உள்ளவர்களிடம், மத்திய அரசுக்குச் சொந்தமான மின் உற்பத்தி நிறுவனங்களிடமோ பேசியதாக ஜெயலலிதாவால் நிரூபிக்க முடியுமா? அதற்கு அவர் தயார்தானா என்று கருணாநிதி சவால் விடுத்துள்ளார்.

Thursday 28 November 2013

மழை தொடர்பான சம்பவங்களில் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு நிதியுதவி


தமிழகத்தில் மழை தொடர்பான சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி அறிவித்துள்ளார் முதல்வர் ஜெயலலிதா.
தமிழ்நாட்டில்  அண்மையில் பெய்த மழையின் காரணமாக,  31.10.2013 அன்று  விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த  சுந்தரம் மகன் சக்திவேல், மின்சாரம் தாக்கியதில்  உயிரிழந்தார்.
1.11.2013 அன்று மதுரையைச் சேர்ந்த சங்கையா மனைவி தில்லையம்மாள்; 4.11.2013 அன்று விழுப்புரம் மாவட்டம், நவமால் காப்பேர் கிராமத்தைச் சேர்ந்த மதிவாணன் மகன் நாகேஸ்வரன்;  நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த சக்கரபாணி மனைவி பானுமதி; திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பெரியக்காள்; அதே மாவட்டத்தைச் சேர்ந்த முருகன் மகன் பெரியண்ணன் - ஆகியோர்  இடி, மின்னல் தாக்கியதில் உயிரிழந்தனர். 
10.11.2013 அன்று கடலூர் மாவட்டம், சான்றோர்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த  கோவிந்தராஜ் மனைவி சாந்தி; 16.11.2013  அன்று  நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த விஜி என்கிற விஜியா சாமுண்டீஸ்வரி; விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த அர்ச்சுனன்   மனைவி அய்யம்மாள் ஆகியோர்  வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தனர்.
16.11.2013 அன்று  விழுப்புரம் மாவட்டம்,  திண்டிவனம் வட்டம், மரக்காணம் கிராமத்தைச் சேர்ந்த அரிராமர் மகன் சதீஷ்குமார் என்கிற ஏழுமலை மீது  மரம் சாய்ந்து விழுந்ததில் உயிரிழந்தார்.
இந்த துயர சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துள்ள முதல்வர் ஜெயலலிதா, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளார்.

Readmore:www.dinamani.com

Wednesday 27 November 2013

ஆர்யா, சந்தானத்துடன் இணையும் ராஜேஷ்


இயக்குனர் ராஜேஷ் - நடிகர் ஆர்யா கூட்டணி மீண்டும் இணைகிறது.
‘ஹாட்ரிக்’ வெற்றி பெற்ற இயக்குனர், அடுத்தும் மாபெரும் வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட ராஜேஷ் இயக்கிய ‘அழகுராஜா’ திரைப்படம் மோசமான தோல்வியைத் தழுவியது. இந்த தோல்வி இயக்குனர் ராஜேஷை ரொம்பவே பாதித்து விட்டதாகத் தெரிகிறது.
அதனால், ராஜேஷ், தனது அடுத்த படத்தை மீண்டும் பழையபடியே வெற்றிப்படமாக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கிட்டார். டைரக்டர் ராஜேஷ். எம், ஆர்யா, நயன்தாரா, சந்தானம் கூட்டணியில் வந்த பாஸ் என்கிற பாஸ்கரன் செம ஹிட் படம். இப்போது இந்த கூட்டணி மீண்டும் இணைகிறது.
ராஜேஷின் ஆஸ்தான நகைச்சுவை நடிகர் சந்தானமும் ஆர்யா நடிக்கும் படத்தில் இருக்கிறாராம். படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஜூன் மாதம் தொடங்க உள்ளது. இந்தப் படத்தில் ஆர்யா, நடிப்பதோடு மட்டுமில்லாமல், தனது 'தி ஷோ பீப்புள்' (The Show People) நிறுவனம் மூலம் படத்தை தயாரிக்கவும் செய்கிறார்.

Readmore:www.dinamani.com

Monday 25 November 2013

மின் தட்டுப்பாடு : பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம்

தமிழகத்தில் திடீரென ஏற்பட்டுள்ள மின் தட்டுப்பாடு குறித்து பிரதமர் மன்மோகன் சிங்குக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.
அதில், தமிழகத்தில் நவம்பர் மாதம் எதிர்பாராத மற்றும் திடீரென ஏற்பட்ட மின் தட்டுப்பாடு குறித்து உங்கள் கவனத்துக்குக் கொண்டு வர விரும்புகிறேன்.
2011ஆம் ஆண்டு நான் தமிழகத்தில் முதல்வராக பொறுப்பேற்ற போது, தமிழகத்தில் சுமார் 4000 மெகாவாட் மின்சாரம் தட்டுப்பாட்டில் இருந்தது. அப்போது, தமிழகத்துக்கு வரும் மின் பரிமாற்றத் தடங்களை அதிகரித்து, பிற மாநிலங்களில் இருந்து மின்சாரம் பெற வழி செய்யுமாறு உங்களுக்கு கோரிக்கை வைத்தேன். ஆனால், அது நிறைவேற்றப்படவில்லை. எனினும், தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு, மின் தட்டுப்பாட்டை குறைத்து வந்தது.
நவம்பர் மாதம் இரண்டாம் வாரம் வரை தமிழகத்தில் மின் தட்டுப்பாடு இல்லாத நிலை இருந்தது. இதனால், தமிழக மக்கள் மகிழ்ச்சி அடைந்தன.
ஆனால், திடீரென தமிழகத்தில் மின் நிலைமை மோசமடைந்தது. மின் உற்பத்தி நிலையங்களில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் அளவு குறைந்தது. சில மின் உற்பத்தி அலகுகளில் பழுது ஏற்பட்டு மின் உற்பத்தி தடை பட்டது. சென்னை மின் உற்பத்தில் நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டு மின்சார உற்பத்தி பாதிக்கப்பட்டது. இதுபோன்று ஒரே நேரத்தில் நிகழ்ந்த இந்த சம்பவங்களால், தமிழகத்தில் கடும் மின் பற்றாக்குறை எற்படும் நிலை உருவாகியுள்ளது.
இதனை தவிர்க்க, தமிழக மக்களின் நலனுக்காக, தமிழகத்தில் உள்ள மத்திய நிறுவனங்களின் கீழ் வரும் மின் உற்பத்தி நிலையங்களின் மின் உற்பத்தியை அதிகரித்து, தமிழகத்தில் நிலவும் மின் பற்றாக்குறையை போக்க உதவிடுமாறு உத்தரவிட வேண்டுகிறேன்.  இந்த பிரச்னையில் பிரதமர் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுத்தால், தமிழகம் இருளில் மூழ்கும் அபாயத்தில் இருந்து காக்கலாம் என்று வலியுறுத்தியுள்ளார்.
Readmore:www.dinamani.com

திருச்சியில் வழக்குரைஞர்கள் சாலைமறியல்: போக்குவரத்து பாதிப்பு

First Published : 25 November 2013 12:48 PM IST
திருச்சியில் வழக்குரைஞர்கள் திடீரென சாலைமறியலில் ஈடுபட்டனர். திருச்சி நீதிமன்றத்தின் முன்பு 300க்கும் மேற்பட்டோர் மேற்கொண்ட இந்த சாலைமறியலால் திருச்சி கண்டோன்மெண்ட் பகுதியில் சுமார் 45 நிமிடங்களாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
வழக்குரைஞர்கள் ஆரோக்கியதாஸ், பொன்முருகன், செல்லத்துரை இவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்த சாலைமறியல் நடைபெற்றது.
அவர்களிடம் தாசில்தார் பேச்சுவார்த்தை நடத்தினார். நாளை மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பேச்சுவார்த்தைக்கு அழைப்பதாகவும் உரிய தீர்வு காணப்படும் என்றும் கூறப்பட்டதை அடுத்து சாலைமறியல் கைவிடப்பட்டது.

Readmore:www.dinamani.com

Friday 22 November 2013

ஏற்காடு இடைத்தேர்தல்: நவம்பர் 28-இல் முதல்வர் பிரசாரம்


இடைத்தேர்தல் நடைபெறும் ஏற்காடு தொகுதியில் முதல்வர் ஜெயலலிதா நவம்பர் 28-ஆம் தேதி பிரசாரம் செய்ய உள்ளார்.
ஏற்காடு தொகுதியில் வரும் டிசம்பர் 4-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இங்கு  அதிமுக வேட்பாளர் பி.சரோஜா உள்பட மொத்தம் 11 பேர் போட்டியிடுகின்றனர்.
இந்தத் தேர்தலில் அதிமுக, திமுக இடையே நேரடியான போட்டி நிலவுகிறது. இந்த இரண்டு பெரிய கட்சிகளைத் தவிர இங்கு போட்டியிடும் 9 வேட்பாளர்களும் சுயேச்சைகள்.
இந்தத் தொகுதியில் அதிமுக சார்பில் ஏற்கெனவே தேர்தல் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. அமைச்சர்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகள் உள்ளிட்ட தேர்தல் பொறுப்பாளர்கள் வாக்குகளைச் சேகரித்து வருகின்றனர்.
இந்த நிலையில் முதல்வர் ஜெயலலிதாவின் தேர்தல் பிரசார பயண விவரத்தை அதிமுக தலைமைக் கழகம் வியாழக்கிழமை அறிவித்துள்ளது.
அதன் விவரம்:
1. மின்னாம்பள்ளி - பேசும் இடம் (வழி: காரிப்பட்டி, கருமாபுரம், மேட்டுப்பட்டி, எம்.பெருமாபாளையம், டோல்கேட்)
2. வெள்ளாளகுண்டம் பிரிவு - பேசும் இடம் (வழி: காட்டுவேப்பிலைப்பட்டி, முத்தம்பட்டி, வாழப்பாடி பிரிவு)
3. வாழப்பாடி பஸ் நிலையம் - பேசும் இடம் (வழி: பேளூர் சாலைப் பிரிவு, துக்கியாம்பாளையம், அத்தனூர்பட்டி)
4. பேளூர் - கருமந்துறை பிரிவு சாலை, எம்.ஜி.ஆர்.சிலை அருகில் - பேசும் இடம் (வழி: பள்ளத் தாதனூர், நடுப்பட்டி)
5. நீர்முள்ளிக்குட்டை - பேசும் இடம் (வழி: ராஜாபட்டினம், பூசாரிப்பட்டி, அனுப்பூர் பிரிவு)
6. கூட்டாத்துப்பட்டி - பேசும் இடம் (வழி: சர்க்கார் நாட்டார் மங்கலம், ஏ.என்.மங்கலம், செல்லியம்பாளையம், குள்ளம்பட்டி பிரிவு)
7. வலசையூர் - பேசும் இடம் (வழி: ராமர் கோயில்)
8. அயோத்தியாப்பட்டினம் - பேசும் இடம்
9. உடையாப்பட்டி - பேசும் இடம்

Readmore:www.dinamani.com

Thursday 21 November 2013

தமிழகத்தில் 16 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

http://dinamani.com/latest_news/2013/11/21/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-16-%E0%AE%90%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF/article1903190.ece



தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் பணியாற்றி வந்த 16 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
செந்தில் குமார் ஐபிஎஸ், ராஜேந்திரன் ஐபிஎஸ், லலிதா லஷ்மி, ராமகிருஷ்ணன் ஐபிஎஸ், விமலா ஐபிஎஸ், நரேந்திரன் நாயர் ஐபிஎஸ், லஷ்மி ஐபிஎஸ், சரவணன் ஐபிஎஸ், ருபேஷ் குமார் மீனா ஐபிஎஸ், செல்வகுமார் ஐபிஎஸ், சிவக்குமார் ஐபிஎஸ், சோனல் சந்திரா ஐபிஎஸ், பெரோஸ் கான் அப்துல்லா ஐபிஎஸ், ஜெயந்தி ஐபிஎஸ், ஜோஷி நிர்மல் குமார் ஐபிஎஸ் உள்ளிட்டோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

Readmore:www.dinamani.com

Friday 15 November 2013

கன மழை : சென்னையில் பள்ளிகளுக்கு விடுமுறை

First Published : 16 November 2013 10:19 AM IST 

சென்னையில் பெய்து வரும் கன மழை காரணமாக சென்னையில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக சென்னையில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தியை அறியாத பல மாணவ, மாணவிகள் பள்ளிகளுக்கு வந்து, விடுமுறை என்ற அறிவிப்பை பார்த்து திரும்பிச் சென்றனர்.

Read more:www.dinamani.com

Wednesday 13 November 2013

மெரினா கலங்கரை விளக்கம் இன்று முதல் பொதுமக்கள் பார்வைக்கு

சென்னை மெரினா கடற்கரை கலங்கரை விளக்கம் பொதுமக்கள் பார்வையிடுவதற்காக இன்று (வியாழக்கிழமை) காலை 10.30 மணிக்குத் திறக்கப்படுகிறது.
ரூ.1 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்டுள்ள இந்த கலங்கரை விளக்கத்தை மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜி.கே.வாசன் திறந்துவைக்கிறார்.
19 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த கலங்கரை விளக்கம் பொதுமக்கள் பார்வைக்கு திறக்கபடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இன்று பொதுமக்களுக்கு இலவசமாக திறந்துவிடப்படுகிறது. நாளை முதல் நுழைவு கட்டணம் வசூலிக்கப்படும் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்

keywords:Tamil daily News | Tamilnadu newspaper

Tuesday 12 November 2013

ஈழத் தமிழர் படுகொலைக்குக் காரணமான காங்., தி.மு.க.வை மன்னிக்க மாட்டோம்



ஈழத் தமிழர் படுகொலைக்குக் காரணமான காங்கிரஸ் மற்றும் திமுக கூட்டணிக் கட்சிகளை மன்னிக்க மாட்டோம் என மதிமுக பொதுச் செயலர் வைகோ கூறினார்.
இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்பதைக் கண்டித்தும், காமன்வெல்த் அமைப்பைக் கண்டித்தும் மதுரையில் வைகை எக்ஸ்பிரஸ் ரயில் எஞ்ஜின் முன் நின்று மறியலில் ஈடுபட்ட வைகோ செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஈழத் தமிழரைக் கொன்றதன் மூலம் சர்வதேச குற்றவாளியாக இலங்கை அதிபர் குற்றச்சாட்டுக்கு ஆளான நிலையில், அங்கு காமன்வெல்த் மாநாட்டை நடத்துவது சரியல்ல. ஆனால், அங்கு மாநாடு நடத்துவதன் மூலம் சர்வதேச குற்றவாளியான ராஜபட்சவைத் தண்டனையிலிருந்து காப்பாற்றும் முயற்சியாக இந்தியாவே மறைமுகமாக மாநாட்டை நடத்துகிறது. பிரதமர் பங்கேற்காவிட்டாலும், அவரது அமைச்சர் பங்கேற்கிறார். ஜனநாயக மரபை மீறியதாக நைஜீரியா, பாகிஸ்தான், உகாண்டா, தென்னாப்பிரிக்கா, பிஜி தீவு ஆகியவை காமன்வெல்த் அமைப்பிலிருந்து நீக்கப்பட்டன. ஆனால், பல லட்சம் தமிழர்களைப் படுகொலை செய்த இலங்கை நீக்கப்படவில்லை.
தென்னாப்பிரிக்காவில் நெல்சன் மண்டேலாவுக்கு நிகராகப் போராடிய நோபல் பரிசு பெற்ற லெஸ்பின்டிட்டோ, காமன்வெல்த் மாநாட்டை அனைத்து நாடுகளும் புறக்கணித்தால் ஈழத் தமிழருக்கு நீதி கிடைக்கும் என்கிறார்.
ஈழப் போரின்போது இந்திய அரசு இலங்கைக்கு ஆயுத உதவி அளித்தது. அப்போது காங்கிரஸ் கூட்டணி அரசில் தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றிருந்தன.
இக் கட்சிகளை ஒருபோதும் மன்னிக்க மாட்டோம்.
காமன்வெல்த் மாநாடு நடப்பதால், ஈழத் தமிழர் பிரச்னை முடிந்துவிடாது. தமிழகத்தில் உள்ளோர் சாதி, மதம் பாராமல் தொடர்ந்து போராடுவோம்.
தமிழகத்தில் முள்ளிவாய்க்கால் முற்றத்தை அகற்ற அதிமுக அரசு நீதிமன்றத்தில் மனுச் செய்தது கண்டிக்கத்தக்கது. அதிமுக அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றிய தீர்மானமும் முழுமையானதல்ல. இலங்கையில் தமிழ் ஊடகவியலாளர் இசைப்பிரியா கொலை குறித்து மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் நான்கு ஆண்டுக்குப் பிறகு கருத்தைத் தெரிவித்துள்ளார். இதுவரை அவர் எங்கிருந்தார்? இலங்கை தமிழர் படுகொலை குறித்த குறுந்தகடை கேலி செய்தவர்தான் கருணாநிதி என்றார்.
முன்னதாக, ரயில் நிலைய மேற்கு நுழைவுவாயிலில் இருந்து கட்சியினருடன் தண்டவாளம் வழியாக 2-வது பிளாட்பாரத்துக்கு வந்த வைகோ, போலீஸ் தடையை மீறி வைகை எக்ஸ்பிரஸ் எஞ்ஜின் முன் தண்டவாளத்தில் நின்றார். போலீஸார் தடுத்தும் வைகோ கட்சியினருடன் ரயில் முன்வந்தார். பின் மத்திய காங்கிரஸ் அரசையும், சோனியா காந்தி, மன்மோகன் மற்றும் காமன்வெல்த் அமைப்பையும் கண்டித்து கோஷம் எழுப்பினார்.
காலை 6.20 மணிக்கு தண்டவாளத்தில் நின்ற வைகோவை 6.40 மணிக்கு கைது செய்ய போலீஸார் வந்தனர். உடனே, அவர், உங்களிடம் தமிழ் ரத்தம்தானே ஓடுகிறது சிங்களவரிடமா ஊதியம் பெறுகிறீர்கள்? எனக் கடிந்து கொண்டார்.
பின்னர் தொடர்ந்து ரயில் முன் நின்று கோஷம் எழுப்பினார். அதன்பின், காலை 7.20 மணிக்கு அவரை மாநகர் துணை ஆணையர் தமிழ்ச்சந்திரன் தலைமையிலான போலீஸார் கைது செய்வதாகக் கூறி அழைத்துச் சென்றனர். அரசு டவுன் பஸ்ஸில் தொண்டர்களுடன் ஏறிச்சென்றார்.
இதையடுத்து, மதிமுக மாநகர் மாவட்டச் செயலர் புதூர் மு.பூமிநாதன் தலைமையிலும், அவைத் தலைவர் சின்னச்செல்லம் தலைமையிலும் மறியலுக்கு முயன்று கைதாயினர். மதிமுக ரயில்வே தொற்சங்கத்தினர் மணி தலைமையில் கைதாயினர். மறியலில் ஈடுபட்டு 3 பெண்கள் உள்ளிட்ட 331 பேர் கைது செய்யப்பட்டு, தமுக்கம் மைதானத்தில் தங்க வைக்கப்பட்டனர். பின்னர், அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

website:www.dinamani.com

வெளிநாட்டு பணம் வந்தது எப்படி? அரவிந்த் கெஜ்ரிவால் கட்சிக்கு மத்திய அரசு கேள்வி


வெளிநாட்டில் இருந்து முறைகேடாக பணம் வந்தாக எழுந்த குற்றச்சாட்டுக்கு பதில் அளிக்கும்படி அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம்ஆத்மி கட்சிக்கு மத்திய அரசு கேள்வியெழுப்பியுள்ளது. இது குறித்து பேசிய மத்திய உள்துறை அமைச்சர் ஷிண்டே மத்திய அரசு அனுப்பிய கேள்விகளுக்கு அக்கட்சி இன்னும் பதிலளிக்கவில்லை என்றார்.
இதனிடையே இந்த புகார் குறித்து பேசிய அக்கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் தாங்கள் குற்றவாளி என்றால் இரட்டை தண்டனையை ஏற்க தயாராக இருக்கின்றோம். வெளிநாட்டுவாழ் இந்தியர்களிடம் இருந்து பணம் பெறுவது குற்றமல்ல. இது குறித்த அனைத்து தகவல்களையும் இணையதளத்தில் வெளியிட்டுள்ளோம் என்றார்.
இந்நிலையில் வெளிநாட்டில் இருந்து முறைக்கேடாக பணம் வந்ததாக தொடரப்பட்ட வழக்கில் ஆம் ஆத்மி கட்சி வரும் டிசம்பர் 10ஆம் தேதிக்குள்  விளக்கம் அளிக்க வேண்டும் என்று தில்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

website:www.dinamani.com

Sunday 10 November 2013

சவூதியில் தவிக்கும் தமிழர்களை மீட்க நடவடிக்கை

சவூதியில் தவிக்கும் தமிழர்களை மீட்க நடவடிக்கை

சவூதியில் தவிக்கும் தமிழர்களை மீட்டு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக ஞாயிற்றுக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:-
சவூதி அரேபியாவில் உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதற்காக கொண்டு வரப்பட்ட நிதாகத் சட்டத்தால் அங்கு பணியாற்றி வந்த இந்தியர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்திய வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களின்படி நிதாகத் சட்டம் அறிவிக்கப்பட்டதிலிருந்து 1.34 லட்சம் பேர் பேர் தாயகம் திரும்பியுள்ளனர். இவர்களில் சுமார் 20 ஆயிரம் பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
இவர்கள் தவிர மீதமுள்ள 12 லட்சம் இந்தியர்களின் வேலைவாய்ப்பு நிலைமை என்ன என்பது தெளிவாகத் தெரியவில்லை.
ஆனால், பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் உள்பட பல லட்சம் இந்தியர்கள் உரிய ஆவணங்கள் இல்லாததால் அங்கு வேலை செய்ய முடியாமலும், தாயகம் திரும்ப முடியாமலும் அவர்கள் தங்கியுள்ள வீடுகளிலேயே முடங்கிக் கிடக்கின்றனர். மேலும், அவர்கள் உணவு, தண்ணீரின்றி அவதிப்படுவதாக அங்கிருந்து திரும்பியவர்கள் தெரிவித்துள்ளனர்.
அவர்களை உடனடியாக மீட்டு அழைத்து வராவிட்டால் கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்படும் ஆபத்து உள்ளது.
இதை உணர்ந்த கேரள அரசு, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தை மட்டும் நம்பிக் கொண்டிருக்காமல், வெளிநாடுவாழ் மலையாளிகள் விவகாரத்துறை மூலம் சவூதி அரேபியத் தலைநகர் ரியாத், ஜெட்டா, தமாம் ஆகிய இடங்களுக்கு ஆலோசனைக் குழுக்களை அனுப்பி உரிய ஆவணங்கள் இல்லாமல் தவிக்கும் மலையாளிகளை மீட்டு வர நடவடிக்கை எடுத்திருக்கிறது.
சவுதியிலிருந்து திரும்புபவர்களுக்கு இலவச பயணச் சீட்டு உள்ளிட்ட சலுகைகளை அறிவித்துள்ள கேரள அரசு, விரைவில் தனி விமானங்களையும் அனுப்ப திட்டமிட்டிருக்கிறது.
ஆனால், சவூதியில் தவிக்கும் தமிழர்களை மீட்டுவர அத்தகைய நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை.
எனவே, தமிழர்களை மீட்டு வருவதற்கான நடவடிக்கைகளைப் போர்க்கால அடிப்படையில் தமிழக அரசு எடுக்க வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

keywords:Tamil daily News | Tamilnadu newspaper

Thursday 7 November 2013

10-ம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களை தனித்தேர்வர்களாக எழுத வற்புறுத்தக் கூடாது


10-ம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களை தனித்தேர்வர்களாக எழுத வற்புறுத்தக் கூடாது


பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களை தனித்தேர்வர்களாக எழுத வற்புறுத்தக் கூடாது என தனியார் பள்ளிகளுக்கு மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தனியார் பள்ளிகள் அவ்வாறு வற்புறுத்தினால் பெற்றோர்கள் இ-மெயில் மூலமாகவும், எஸ்.எம்.எஸ். மூலமாகவும் புகார் தெரிவிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் ஆர்.பிச்சை வெளியிட்ட அறிவிப்பு:
பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பயிலும் மாணவர்களை கல்வியாண்டின் இடையில்
பெற்றோர்களின் விருப்பமின்றி மாற்றுச்சான்றிதழ் வழங்கி தனித்தேர்வர்களாக அவர்களை பொதுத்தேர்வு எழுத வலியுறுத்தக்கூடாது என ஏற்கெனவே அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர்கள் மூலமாகவும், தனியார் பள்ளிகளின் முதல்வர்கள் கூட்டங்களிலும் பள்ளி மாணவர்களை எந்தக் காரணத்தாலும் தனித்தேர்வர் என விண்ணப்பித்து தேர்வு எழுத வற்புறுத்தக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தனியார் பள்ளிகளின் பத்தாம் வகுப்பு மாணவர்களை மதிப்பெண்
குறைவாக பெற்ற காரணத்தால் தனித்தேர்வர்களாக தேர்வு எழுதுமாறு மெட்ரிக் பள்ளிகள் வற்புறுத்துவதாக மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகத்துக்கு இ-மெயில் மூலமó புகார்கள் வருகின்றன.
பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு கல்வியாண்டின் இடையில் பெற்றோர் விருப்பமின்றி மாற்றுச் சான்றிதழ் வழங்கக் கூடாது. இந்த மாணவர்களை எந்தக் காரணம்கொண்டும் தனித்தேர்வர்கள் என விண்ணிப்பித்து தேர்வு எழுத வற்புறுத்தக்கூடாது.
இந்த விதிகளைப் பின்பற்றாத பள்ளிகள் மீது துறை ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கிறோம்.
இதில் ஏதேனும் விதிமீறல்கள் இருக்கும் என்றால் கீழ்க்கப்பட்ட இ-மெயில் முகவரியிலும், எஸ்.எம்.எஸ். மூலமும் பெற்றோர்கள் புகார் தெரிவிக்கலாம்.
இ-மெயில் முகவரி:  dmschennai2010@gmail.com, எஸ்.எம்.எஸ். அனுப்ப வேண்டிய செல்போன் எண்கள்: 94421-44401, 94435-74633.


Tuesday 5 November 2013

அதுதான் அஜீத்: ஆர்யா பெருமிதம்


அதுதான் அஜீத்: ஆர்யா பெருமிதம்


அஜீத், என்னை சொந்த தம்பியை பார்த்துக்கொள்வது போல் பார்த்துக்கொண்டார் என்று ஆர்யா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறியதாவது: அஜீத் எப்போதும் என் பேவரைட். அவரது ஸ்டைலுக்கு நான் தீவிர ஃபேன். அவருடன் நடித்தபோது, சொந்த தம்பியை பார்த்துக்கொள்வது போல் பார்த்துக்கொண்டார். அதே சமயம், ஷூட்டிங் ஸ்பாட்டில் அவர் என்னுடன் அடித்த அரட்டையெல்லாம் ஒரு நல்ல நண்பரை எனக்கு ஆரம்பம் பெற்றுத் தந்துள்ளது.
அஜீத்துக்கு காயம் ஏற்பட்ட போது முழு டீமும் கலங்கிப்போச்சு. டூப் போடாம அஜீத் நடிச்சாரு. எதிர்பாராதவிதமா அந்த விபத்து நடந்துருச்சு. ஆனா ஒண்ணு சொல்லணும் அஜீத்தோட தில் மெய்சிலிர்க்க வச்சுது. படத்தில் என்னுடைய நடிப்பை அஜீத் பாராட்டியது அவருடைய பெருந்தன்மையை காட்டுது.
படத்துல தனக்கு இணையா இன்னொரு ஹீரோ நடிக்கிறது எந்த சூப்பர் ஸ்டாரும் ஏத்துக்க மாட்டாங்க. ஆனா அதை ஏத்துக்கிட்டது மட்டுமில்ல. எனக்கு முழு சப்போர்ட்டும் பண்ணினாரு. பட விளம்பரத்துல தன்னோட பெயரோடு என் பெயரும் வர வச்சாரு. அதுதான் அஜீத் என இவ்வாறு ஆர்யா கூறினார்.

keyword:Tamil daily News | Tamilnadu newspaper

 

Monday 4 November 2013

விழுப்புரத்தில் மின்னல் தாக்கி மாணவன் பலி


விழுப்புரத்தில் மின்னல் தாக்கி மாணவன் பலி

விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகே மின்னல் தாக்கியதில் ஐடிஐ மாணவன் நாகேஸ்வரம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
விழுப்புரத்தில் பலத்த மழை பெய்து வரும் நிலையில், திங்கட்கிழமை காலை வயல் வெளியில் நடந்து சென்று கொண்டிருந்த நாகேஸ்வரன் மீது மின்னல் தாக்கியதில் உடல் கருகி உயிரிழந்தார்.