Friday 29 November 2013

மின் உற்பத்தி: காங்கிரஸ் - திமுக கூட்டுச் சதி என்பதை நிரூபிக்க முடியுமா?


"மின் உற்பத்தியைக் குறைக்க காங்கிரஸ் - திமுக கைகோர்த்து கூட்டுச் சதி செய்கிறது' என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளதை, "அவரால் நிரூபிக்க முடியுமா?' என்று திமுக தலைவர் கருணாநிதி சவால் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
ஏற்காடு இடைத்தேர்தல் பிரசாரத்தின்போது மின்வெட்டுப் பிரச்னைக்கு முக்கியத்துவம் கொடுத்து முதல்வர் ஜெயலலிதா பேசியுள்ளார்.
மத்திய அரசு நிறுவனங்களின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள மின் உற்பத்தி நிலையங்களில்தான் சொல்லி வைத்தாற்போல் ஒரே சமயத்தில் கோளாறுகள் ஏற்பட்டுள்ளன என்று முதல்வர் குற்றம்சாட்டியுள்ளார். இது சதி என்றும் அவர் கூறியுள்ளார்.
ஒரு முதல்வராக இருப்பவர் பொறுப்புணர்ந்து பேச வேண்டும்.
மின் உற்பத்தியை எந்த அரசும் சதி செய்து குறைக்க முன் வராது. அதற்கு யாரும் துணை போக மாட்டார்கள்.
மின் உற்பத்தியைக் குறைக்கக் கூறி, மத்திய அரசிடம் யாராவது கேட்க முடியுமா?
மத்திய அரசின் கட்டுப்பாட்டின்கீழ் உள்ள மின் உற்பத்தி நிலையங்களில் ஆண்டுதோறும் மின் தேவை குறைவாக உள்ள மழைக் காலங்களில் மேற்கொள்ளப்படும் பராமரிப்பு பணிகளால்தான் மின் உற்பத்தி குறையும்.
இந்தப் பராமரிப்பு பணி என்பதும் திடீரென செய்யப்படுவதில்லை.
ஒவ்வோர் ஆண்டும் குறைந்தபட்சம் 20 நாள்களுக்கு பராமரிப்பு பணி மேற்கொள்வதற்காகவே மின் உற்பத்தி நிறுத்தப்படும்.
நிலக்கரி தட்டுப்பாடு: மின்சாரம் தயாரிக்கத் தேவையான நிலக்கரி மற்றும் நாப்தா ஆகியவற்றுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது என்றும். தேவையான நிலக்கரியை மத்திய அரசு வழங்கவில்லை என்றும் ஜெயலலிதா கூறியுள்ளார்.
வடசென்னை, மேட்டூர் மின் நிலையங்களுக்கு 90 லட்சம் டன் நிலக்கரி தேவை. மத்திய அரசு 37 லட்சம் நிலக்கரிதான் வழங்க வாக்குறுதி அளித்துள்ளது.
தமிழகத்துக்கு தேவையான நிலக்கரியை வடஇந்தியாவில் உள்ள இரண்டு சுரங்கங்களில் வெட்டி எடுத்துக்கொள்ள மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
சத்தீஸ்கரில் சுரங்கப் பணி நடைபெற்று வருகிறது.
ஆனால் ஒடிசா மாநிலத்தில் மந்தாகிணி சுரங்கப் பணியின் முன்னேற்றத்தில் தமிழக அரசு அதிக அக்கறை காட்டவில்லை. அதனால்தான் நிலக்கரி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்பதே உண்மை.
நிரூபிக்கத் தயாரா? மின் உற்பத்தியில் காங்கிரஸ் - திமுக கைகோர்த்து தமிழக மக்களைப் பழிவாங்குவதாக பெரிய குற்றச்சாட்டை முதல்வர் கூறியுள்ளார்.
ஜெயலலிதாவுக்கு சவால் விட்டுக் கேட்கிறேன்.
மின் உற்பத்தி நிறுவனங்களைப் பற்றி நானோ (கருணாநிதி) திமுகவினரோ மத்திய அரசில் உள்ளவர்களிடம், மத்திய அரசுக்குச் சொந்தமான மின் உற்பத்தி நிறுவனங்களிடமோ பேசியதாக ஜெயலலிதாவால் நிரூபிக்க முடியுமா? அதற்கு அவர் தயார்தானா என்று கருணாநிதி சவால் விடுத்துள்ளார்.

No comments:

Post a Comment