Thursday 31 October 2013

ஃபோனில் பேசிப் பேசி காதல் வளர்க்கும் மன்மதன்


ஃபோனில் பேசிப் பேசி காதல் வளர்க்கும் மன்மதன்

 

ஃபோனில் பேசிப் பேசி சிம்பு காதல் வளர்க்கப் போகிறாராம்.
சிம்பு, இப்போது கூட்டணி அமைத்திருப்பது ‘பசங்க’ இயக்குனர் பாண்டிராஜூடன். இந்தப்படத்தின் படப்பிடிப்பு இரவும் பகலும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. படத்தில் சிம்புவின் நண்பனாக சந்தானத்துடன் சேர்ந்து சூரியும் நடிக்கிறார்.
இந்தப் படத்தில் சிம்பு எப்போதும் ஃபோனில் பேசிக்கொண்டிருப்பது மாதிரியான ஒரு கேரக்டரில் நடிக்கிறாராம்! இப்படி ஃபோனில் பேசப் பேச அப்படியே அவரது காதலும் வளருமாம்! இந்த தகவலை சிம்புவே டுவீட் செய்திருக்கிறார். இன்னொரு முக்கியமான விஷயம் இந்தப்படத்தை சிம்புவே தனது சொந்த நிறுவனத்தின் மூலம் தயாரிக்கிறாராம்.
அதைவிட முக்கியமான விஷயம் இந்தப்படத்தில் சிம்புவின் தம்பி குறளரசன் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகிறார். படத்தின் நாயகி யார் என்று இன்னும் முடிவாகாத நிலையில் சிம்பு யாருடன்தான் ஃபோனில் பேசுகிறார் எனத் தெரியவில்லை.
 keyword: Tamil News Paper | online tamil news

Tuesday 29 October 2013

ரூ.2 லட்சம் மின் கட்டணம் வந்ததால் அதிர்ச்சி அடைந்த விவசாயி

ரூ.2 லட்சம் மின் கட்டணம் வந்ததால் அதிர்ச்சி அடைந்த விவசாயி

தர்மபுரி அருகே ரூ.70 மின் கட்டணம் செலுத்தி வந்த விவசாயிக்கு திடீரென ரூ.2 லட்சம் பில் வந்ததால் அதிர்ச்சியடைந்தார்.
தர்மபுரி மாவட்டம் கம்பைநல்லூர் ஆல்ட்ரிப்பட்டியைச் சேர்ந்தவர் சின்னசாமி (40). விவசாயியான இவர் இரண்டு மாதத்திற்கு ஒருமுறை மின் கட்டணமாக ரூ.70 செலுத்தி வந்துள்ளார். கடந்த வாரம் அவரது வீட்டில் மின்சார மீட்டர் ரீடிங் எடுக்கப்பட்டது. அதில், ரூ.2 லட்சம் மின் கட்டணம் செலுத்தவேண்டும் எனவும், நவம்பர் 10ம் தேதிக்குள் செலுத்தவில்லை எனில் மின்சார இணைப்பு துண்டிக்கப்படும் என்றும் விவசாயி சின்னசாமிக்கு மின் வாரிய கணக்கீட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த சின்னசாமி மின்வாரிய அலுவலகத்தில் முறையிட்டு, சாதாரண குடும்பத்தை சேர்ந்த எனக்கு மாதம்தோறும் ரூ.70க்கும் குறைவாகத்தான் மின் கட்டணம் வரும். மேலும் எங்கள் வீட்டில் ஒரு பேன், ஒரு டி.வி, 2 குண்டு பல்பு மட்டுமே பயன்படுத்துகிறோம். தற்போது திடீரென மின் கட்டணம் லட்சக்கணக்கில் வந்துள்ளது. ஏதோ தவறு நடந்துள்ளது. இதை சரி செய்து நியாயமான கட்டணத்தை எனக்கு நிர்ணயிக்கவேண்டும் என அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தார். இதேபோன்று அதே ஊரை சேர்ந்த பலருக்கும் ஆயிரக்கணக்கில் பில் வந்துள்ளதாக தெரிகிறது. இதனால், பாதிக்கப்பட்ட விவசாயிகள் தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் டி.ஆர்.ஓ ராமரை சந்தித்து மனு கொடுத்துள்ளனர்.

Saturday 26 October 2013

விரைவில் மிகைமின் மாநிலமாகும் தமிழகம்

விரைவில் மிகைமின் மாநிலமாகும் தமிழகம்


தமிழகம் விரைவில் மிகைமின் மாநிலமாக மாறும் என்று முதல்வர் ஜெயலலிதா உறுதியளித்தார். தமிழகத்தில் மின் தட்டுப்பாடு முழுமையாக நீக்கப்பட்டு அனைத்து மக்களுக்கும் தடையற்ற மின்சாரம் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
தமிழகத்தில் மின்வெட்டு இருக்கும் என்று சொன்னாலும் மின்வெட்டே இல்லாமல் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
தமிழகத்தின் மின்சார நிலைமை குறித்து, சட்டப் பேரவையில் எம்.எல்.ஏ.க்கள் பாலபாரதி (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்) மற்றும் ஆறுமுகம் (இந்திய கம்யூனிஸ்ட்) ஆகியோர் வெள்ளிக்கிழமை கொண்டு வந்த சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானத்துக்கு பதிலளித்து முதல்வர் ஜெயலலிதா பேசியது:
கடந்த 1991-ஆம் ஆண்டு முதல் 1996-ஆம் ஆண்டு வரை முதல்வராக இருந்த போது ஆயிரத்து 302 மெகாவாட் மின் நிறுவு திறன் ஏற்படுத்தப்பட்டது. அதற்கடுத்த ஐந்தாண்டுகளில் திமுக ஆட்சியில் வெறும் 561 மெகாவாட் மட்டுமே ஏற்படுத்தப்பட்டது. பின்னர், 2001-ஆம் ஆண்டு முதல் 2006-ஆம் ஆண்டு வரை இரண்டாவது முறையாக முதல்வராக இருந்த போது, 2 ஆயிரத்து 518 மெகாவாட் மின் நிறுவு திறன் ஏற்படுத்தப்பட்டது. காற்றாலை, அனல் மின் நிலையங்கள் சிறப்பாகச் செயல்பட்டன.
ஆனால், 2006-ஆம் ஆண்டு முதல் 2011-ஆம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சிக் காலத்தில் வெறும் 206 மெகாவாட் அளவுக்கே கூடுதல் மின் நிறுவு திறன் ஏற்படுத்தப்பட்டது. 2007- ஆம் ஆண்டு இறுதியிலிருந்தே நிலைமை தலைகீழாக மாற ஆரம்பித்து, 2008- ஆம் ஆண்டிலிருந்து மின் பற்றாக்குறை தமிழகம் முழுவதும் தலைவிரித்து ஆட ஆரம்பித்தது.
அரசு எடுத்த நடவடிக்கைகள்: மூன்றாவது முறையாக தமிழக முதல்வராக பொறுப்பேற்றவுடன் மின் பற்றாக்குறையைச் சமாளிக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்தேன். 600 மெகாவாட் திறனுடைய மேட்டூர் அனல் மின் திட்டம், வட சென்னை அனல் மின் நிலையத் திட்டத்தின் நிலை-2ன் முதல் அலகு (300 மெகாவாட்) ஆகியவற்றின் மூலம் மின்சாரம் தொடர்ந்து கிடைத்து வருகிறது. டிசம்பர் முதல் 600 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும்.
600 மெகாவாட் திறனுடைய வடசென்னை அனல் மின் நிலைய நிலை 2-ன் மூலம் 350 முதல் 450 மெகாவாட் மின் உற்பத்தி கிடைக்கிறது. அடுத்த மாத இறுதியில் முழு அளவில் மின்சாரம் கிடைக்கும். வட சென்னை வல்லூரில் 500 மெகாவாட் திறனுடைய மூன்று அலகுகளில் இரண்டு அலகுகள் உற்பத்தியைத் தொடங்கியுள்ளன. மூன்றாவது அலகு அடுத்த ஆண்டு மே முதல் உற்பத்தியைத் தொடங்கும்.
புதிய அனல் மின் திட்டங்கள் உற்பத்தியைத் தொடங்கியுள்ளதன் மூலம் இப்போது கூடுதலாக ஆயிரத்து 700 மெகாவாட் மின்சாரம் கிடைத்து வருகிறது. இதைத் தவிர மத்திய கால அடிப்படையில் மூன்று ஆண்டுகளுக்கு 500 மெகாவாட் மின்சாரம் இந்த ஆண்டு ஜூன் முதல் பிற மாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.
மின்வெட்டே இல்லாத நிலை: தமிழக அரசு எடுத்த சீரிய முயற்சியால் மேலும் 3 ஆயிரத்து 330 மெகாவாட் மின்சாரம் நீண்ட கால அடிப்படையில் 15 ஆண்டுகளுக்கு கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் பெருமளவு சத்தீஸ்கர் மற்றும் ஒடிஸா மாநிலங்களிலிருந்து பெறப்படும்.
புதிதாக அமைக்கப்பட்டுள்ள மின் வழித் தடங்கள் செயல்பாட்டுக்கு வரும் நிலையில் நாம் கொள்முதல் செய்துள்ள மின்சாரத்தை முழுமையாகப் பெற முடியும். இந்த ஆண்டு பருவமழை சிறப்பாக இருக்கும் காரணத்தால் நீர்மின் உற்பத்தி நிலையங்கள் மூலமான மின் உறபத்தியும் அதிகரித்துள்ளது.
திமுக ஆட்சியில் அறிவிக்கப்படாத மின்வெட்டு என்றிருந்த நிலைமை மாறி, இப்போது அறிவிக்கப்பட்ட மின்வெட்டும் நடைமுறைப்படுத்தாத நிலை ஏற்பட்டுள்ளது.
ஓர் எச்சரிக்கை உணர்வுடன் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்பதற்காகவும், வாக்குறுதி கொடுத்து விட்டு தவறிவிடக் கூடாது என்பதற்காகவும் மின்வெட்டு இருக்கும் எனச் சொல்கிறோம். ஆனால், மின்வெட்டே இல்லாமல் மின்சாரத்தை கொடுத்துக் கொண்டு இருக்கிறோம்.
எனவே, வெகு விரைவில், மிக விரைவில் தமிழகம் மின் மிகை மாநிலமாக ஆக்கப்படும். மின்சார உற்பத்தியில் இப்போது 99 சதவீதம் சாதித்து விட்டோம். இன்னும் ஒரு சதவீதம் தான். இந்த ஆண்டு இறுதிக்குள் அதையும் சாதித்து விடுவோம் என்றார் முதல்வர் ஜெயலலிதா.

 

Sunday 20 October 2013

வங்கக் கடலில் புயல் சின்னம்: தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு


வங்கக் கடலில் புயல் சின்னம்: தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு

 

வங்கக் கடலில் தென் பகுதியில் புயல் சின்னம் உருவாகியுள்ளது. இதனால் அடுத்த இரு தினங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இலங்கை கடல் பகுதியில் ஏற்பட்டுள்ள வளி மண்டல மேல் அடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகத்தில் கடந்த 2 தினங்களாக மழை பெய்து வருகிறது.
இப்போது வங்கக்கடலில் புதிதாக குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது. இது மேலும் வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறும் வாய்ப்புள்ளது.
இது குறித்து வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியது: தென் வங்க கடலின் மத்திய பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இது தமிழகத்தில் இருந்து வெகு தொலைவில் நிலை கொண்டுள்ளதால் இது மேலும் வலுப்பெற்று தமிழகத்தை நோக்கி நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தமிழகத்தில் அடுத்த 2 நாள்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று அவர்கள் எச்சரிக்கை செய்துள்ளனர்.
தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணி நிலவரப்படி பதிவான மழையளவு(மில்லி மீட்டரில்): திண்டிவனம், மதுரை - 90, பாபநாசம், தஞ்சாவூர் - 80, நத்தம், அறந்தாங்கி - 70, ஒகேனக்கல், பூந்தமல்லி - 60, கிருஷ்ணகிரி - 50, வேதாரண்யம், பொள்ளாச்சி, காரைக்குடி, பாளையங்கோட்டை, மதுராந்தகம், கோவை, ஆத்தூர், சோழவந்தான் - 40, தளி, புதுச்சேரி, ஸ்ரீவைகுண்டம், நாகர்கோயில், சங்கரன்கோயில், குளச்சல், சிதம்பரம், அரக்கோணம், தாம்பரம் - 30, செஞ்சி, மன்னார்குடி, சென்னை, செய்யாறு, சத்தியமங்கலம், வந்தவாசி, கூடலூர், செம்பரம்பாக்கம், மேட்டுப்பாளையம், ராமேசுவரம், செங்கோட்டை, விழுப்புரம், ஆரணி, பட்டுக்கோட்டை, நெய்வேலி, ஸ்ரீபெரும்புதூர் - 20, அம்பாசமுத்திரம், மணிமுத்தாறு, ஏற்காடு, ஆண்டிப்பட்டி, கடலூர், காஞ்சிபுரம், சிவகங்கை, அரூர், பெருந்துறை, கொடைக்கானல், தென்காசி, பண்ருட்டி, திருப்பத்தூர், மகாபலிபுரம், கல்லணை, சீர்காழி, வால்பாறை, தூத்துக்குடி, திருத்தணி - 10.

Thursday 10 October 2013

நிரூபித்தார் யுவராஜ்; இந்தியா அபார வெற்றி

நிரூபித்தார் யுவராஜ்; இந்தியா அபார வெற்றி

நெருக்கடியைக் குறைக்கத் தேவையில்லை; நெருக்கடியான நேரத்திலும் சிறப்பாக விளையாட முடியும் என்பதை ஆஸ்திரேலியாவுக்கு எதிரான சர்வதேச டி20 போட்டியில் நிரூபித்தார் யுவராஜ் சிங்.
ராஜ்கோட்டில் வியாழக்கிழமை இரவு நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலியா நிர்ணயித்திருந்த இமாலய இலக்கான 202 ரன்களை 19.4 ஓவர்களில் எட்டி, 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது.
நீண்ட நாள்களுக்குப் பின் களமிறங்கிய யுவராஜ், 35 பந்துகளில் 77 ரன்கள் எடுத்து இறுதிவரை களத்தில் இருந்தார். அவர், இந்த ஆட்டத்தில் 5 சிக்ஸர்களையும் 8 பவுண்டரிகளையும் விளாசி ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தினார்.
அணியின் வெற்றிக்கான ரன்னை அடிக்கும் வாய்ப்பைப் பெற்ற தோனி, ஆட்டமிழக்காமல் 24 ரன்கள் எடுத்தார்.
தொடக்க வீரர் ரோஹித் 8 ரன்களில் ஆட்டமிழந்தபோதும், பதற்றமின்றி விளையாடிய தவன் 32 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்களில் ரெய்னா 19 ரன்களும், கோலி 29 ரன்களும் எடுத்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர்கள், தொடக்கத்தில் இந்திய வீரர்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியிருந்தாலும், யுவராஜ் வருகைக்குப் பின் அமைதியானார்கள்.
இத்தொடரில், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக யுவராஜ் முக்கியப் பங்கு வகிப்பார் என்பது இந்த ஆட்டத்திலேயே நிரூபிக்கப்பட்டது. சந்தேகமின்றி, யுவராஜ் சிங்கே ஆட்ட நாயகன் விருதைப் பெற்றார்.
ஃபிஞ்ச் விளாசல்: முன்னதாக, முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்கள் எடுத்தது.
ஐபிஎல் போட்டிகளில் அதிரடியாக விளையாடிய அனுபவம் பெற்ற ஃபிஞ்ச், இந்தியாவுக்கு எதிராக ஆரம்பத்திலிருந்தே அடித்து ஆட ஆரம்பித்தார். மற்றொரு தொடக்க வீரர் மேடின்சன் 34 ரன்கள் எடுத்தார். ஐபிஎல் போட்டிக்காக அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட மேக்ஸ்வெல், இந்த ஆட்டத்தில் 4 சிக்ஸர்களை விளாசி, 13 பந்துகளில் 27 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
நங்கூரம் போன்று நிலைத்து ஆடிய ஃபிஞ்ச் 29 பந்துகளில் அரை சதம் அடித்தார். அரை சதத்துக்குப் பிறகு அவரின் ஆட்டத்தின் வேகம் அதிகரித்தது. இறுதியில் 89 ரன்கள் எடுத்திருந்தபோது அவரை வினய் குமார் ஆட்டமிழக்கச் செய்தார். 52 பந்துகளைச் சந்தித்த அவர் 1 சிக்ஸர், 14 பவுண்டரிகளுடன் இந்த ரன்களை எடுத்தார்.
இந்தியத் தரப்பில் பிரவீன் குமார், வினய் குமார் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். சுழற்பந்து வீச்சாளர் ஜடேஜா, தன் பங்குக்கு ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினார்.
சிறந்த தொடக்கம்: இந்த வெற்றியின்மூலம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை இந்தியா வெற்றிகரமாக தொடங்கியுள்ளது. இரு அணிகளுக்கு இடையே யான ஒருநாள் தொடரின் முதல் ஆட்டம் வரும் 13-ம் தேதி புணேவில் நடைபெறுகிறது.
சுருக்கமான ஸ்கோர்
ஆஸ்திரேலியா -201/7
(ஃபிஞ்ச் 89, மேடின்சன் 34, வினய் குமார் 3வி/26)
இந்தியா - 19.4
ஓவர்களில் 202/4
(யுவராஜ் 77*, தவன் 32, மெக்கே 2வி/50)