Sunday 20 October 2013

வங்கக் கடலில் புயல் சின்னம்: தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு


வங்கக் கடலில் புயல் சின்னம்: தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு

 

வங்கக் கடலில் தென் பகுதியில் புயல் சின்னம் உருவாகியுள்ளது. இதனால் அடுத்த இரு தினங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இலங்கை கடல் பகுதியில் ஏற்பட்டுள்ள வளி மண்டல மேல் அடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகத்தில் கடந்த 2 தினங்களாக மழை பெய்து வருகிறது.
இப்போது வங்கக்கடலில் புதிதாக குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது. இது மேலும் வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறும் வாய்ப்புள்ளது.
இது குறித்து வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியது: தென் வங்க கடலின் மத்திய பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இது தமிழகத்தில் இருந்து வெகு தொலைவில் நிலை கொண்டுள்ளதால் இது மேலும் வலுப்பெற்று தமிழகத்தை நோக்கி நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தமிழகத்தில் அடுத்த 2 நாள்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று அவர்கள் எச்சரிக்கை செய்துள்ளனர்.
தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணி நிலவரப்படி பதிவான மழையளவு(மில்லி மீட்டரில்): திண்டிவனம், மதுரை - 90, பாபநாசம், தஞ்சாவூர் - 80, நத்தம், அறந்தாங்கி - 70, ஒகேனக்கல், பூந்தமல்லி - 60, கிருஷ்ணகிரி - 50, வேதாரண்யம், பொள்ளாச்சி, காரைக்குடி, பாளையங்கோட்டை, மதுராந்தகம், கோவை, ஆத்தூர், சோழவந்தான் - 40, தளி, புதுச்சேரி, ஸ்ரீவைகுண்டம், நாகர்கோயில், சங்கரன்கோயில், குளச்சல், சிதம்பரம், அரக்கோணம், தாம்பரம் - 30, செஞ்சி, மன்னார்குடி, சென்னை, செய்யாறு, சத்தியமங்கலம், வந்தவாசி, கூடலூர், செம்பரம்பாக்கம், மேட்டுப்பாளையம், ராமேசுவரம், செங்கோட்டை, விழுப்புரம், ஆரணி, பட்டுக்கோட்டை, நெய்வேலி, ஸ்ரீபெரும்புதூர் - 20, அம்பாசமுத்திரம், மணிமுத்தாறு, ஏற்காடு, ஆண்டிப்பட்டி, கடலூர், காஞ்சிபுரம், சிவகங்கை, அரூர், பெருந்துறை, கொடைக்கானல், தென்காசி, பண்ருட்டி, திருப்பத்தூர், மகாபலிபுரம், கல்லணை, சீர்காழி, வால்பாறை, தூத்துக்குடி, திருத்தணி - 10.

No comments:

Post a Comment