Thursday 10 October 2013

நிரூபித்தார் யுவராஜ்; இந்தியா அபார வெற்றி

நிரூபித்தார் யுவராஜ்; இந்தியா அபார வெற்றி

நெருக்கடியைக் குறைக்கத் தேவையில்லை; நெருக்கடியான நேரத்திலும் சிறப்பாக விளையாட முடியும் என்பதை ஆஸ்திரேலியாவுக்கு எதிரான சர்வதேச டி20 போட்டியில் நிரூபித்தார் யுவராஜ் சிங்.
ராஜ்கோட்டில் வியாழக்கிழமை இரவு நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலியா நிர்ணயித்திருந்த இமாலய இலக்கான 202 ரன்களை 19.4 ஓவர்களில் எட்டி, 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது.
நீண்ட நாள்களுக்குப் பின் களமிறங்கிய யுவராஜ், 35 பந்துகளில் 77 ரன்கள் எடுத்து இறுதிவரை களத்தில் இருந்தார். அவர், இந்த ஆட்டத்தில் 5 சிக்ஸர்களையும் 8 பவுண்டரிகளையும் விளாசி ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தினார்.
அணியின் வெற்றிக்கான ரன்னை அடிக்கும் வாய்ப்பைப் பெற்ற தோனி, ஆட்டமிழக்காமல் 24 ரன்கள் எடுத்தார்.
தொடக்க வீரர் ரோஹித் 8 ரன்களில் ஆட்டமிழந்தபோதும், பதற்றமின்றி விளையாடிய தவன் 32 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்களில் ரெய்னா 19 ரன்களும், கோலி 29 ரன்களும் எடுத்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர்கள், தொடக்கத்தில் இந்திய வீரர்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியிருந்தாலும், யுவராஜ் வருகைக்குப் பின் அமைதியானார்கள்.
இத்தொடரில், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக யுவராஜ் முக்கியப் பங்கு வகிப்பார் என்பது இந்த ஆட்டத்திலேயே நிரூபிக்கப்பட்டது. சந்தேகமின்றி, யுவராஜ் சிங்கே ஆட்ட நாயகன் விருதைப் பெற்றார்.
ஃபிஞ்ச் விளாசல்: முன்னதாக, முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்கள் எடுத்தது.
ஐபிஎல் போட்டிகளில் அதிரடியாக விளையாடிய அனுபவம் பெற்ற ஃபிஞ்ச், இந்தியாவுக்கு எதிராக ஆரம்பத்திலிருந்தே அடித்து ஆட ஆரம்பித்தார். மற்றொரு தொடக்க வீரர் மேடின்சன் 34 ரன்கள் எடுத்தார். ஐபிஎல் போட்டிக்காக அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட மேக்ஸ்வெல், இந்த ஆட்டத்தில் 4 சிக்ஸர்களை விளாசி, 13 பந்துகளில் 27 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
நங்கூரம் போன்று நிலைத்து ஆடிய ஃபிஞ்ச் 29 பந்துகளில் அரை சதம் அடித்தார். அரை சதத்துக்குப் பிறகு அவரின் ஆட்டத்தின் வேகம் அதிகரித்தது. இறுதியில் 89 ரன்கள் எடுத்திருந்தபோது அவரை வினய் குமார் ஆட்டமிழக்கச் செய்தார். 52 பந்துகளைச் சந்தித்த அவர் 1 சிக்ஸர், 14 பவுண்டரிகளுடன் இந்த ரன்களை எடுத்தார்.
இந்தியத் தரப்பில் பிரவீன் குமார், வினய் குமார் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். சுழற்பந்து வீச்சாளர் ஜடேஜா, தன் பங்குக்கு ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினார்.
சிறந்த தொடக்கம்: இந்த வெற்றியின்மூலம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை இந்தியா வெற்றிகரமாக தொடங்கியுள்ளது. இரு அணிகளுக்கு இடையே யான ஒருநாள் தொடரின் முதல் ஆட்டம் வரும் 13-ம் தேதி புணேவில் நடைபெறுகிறது.
சுருக்கமான ஸ்கோர்
ஆஸ்திரேலியா -201/7
(ஃபிஞ்ச் 89, மேடின்சன் 34, வினய் குமார் 3வி/26)
இந்தியா - 19.4
ஓவர்களில் 202/4
(யுவராஜ் 77*, தவன் 32, மெக்கே 2வி/50)

 

No comments:

Post a Comment