Saturday 26 October 2013

விரைவில் மிகைமின் மாநிலமாகும் தமிழகம்

விரைவில் மிகைமின் மாநிலமாகும் தமிழகம்


தமிழகம் விரைவில் மிகைமின் மாநிலமாக மாறும் என்று முதல்வர் ஜெயலலிதா உறுதியளித்தார். தமிழகத்தில் மின் தட்டுப்பாடு முழுமையாக நீக்கப்பட்டு அனைத்து மக்களுக்கும் தடையற்ற மின்சாரம் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
தமிழகத்தில் மின்வெட்டு இருக்கும் என்று சொன்னாலும் மின்வெட்டே இல்லாமல் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
தமிழகத்தின் மின்சார நிலைமை குறித்து, சட்டப் பேரவையில் எம்.எல்.ஏ.க்கள் பாலபாரதி (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்) மற்றும் ஆறுமுகம் (இந்திய கம்யூனிஸ்ட்) ஆகியோர் வெள்ளிக்கிழமை கொண்டு வந்த சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானத்துக்கு பதிலளித்து முதல்வர் ஜெயலலிதா பேசியது:
கடந்த 1991-ஆம் ஆண்டு முதல் 1996-ஆம் ஆண்டு வரை முதல்வராக இருந்த போது ஆயிரத்து 302 மெகாவாட் மின் நிறுவு திறன் ஏற்படுத்தப்பட்டது. அதற்கடுத்த ஐந்தாண்டுகளில் திமுக ஆட்சியில் வெறும் 561 மெகாவாட் மட்டுமே ஏற்படுத்தப்பட்டது. பின்னர், 2001-ஆம் ஆண்டு முதல் 2006-ஆம் ஆண்டு வரை இரண்டாவது முறையாக முதல்வராக இருந்த போது, 2 ஆயிரத்து 518 மெகாவாட் மின் நிறுவு திறன் ஏற்படுத்தப்பட்டது. காற்றாலை, அனல் மின் நிலையங்கள் சிறப்பாகச் செயல்பட்டன.
ஆனால், 2006-ஆம் ஆண்டு முதல் 2011-ஆம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சிக் காலத்தில் வெறும் 206 மெகாவாட் அளவுக்கே கூடுதல் மின் நிறுவு திறன் ஏற்படுத்தப்பட்டது. 2007- ஆம் ஆண்டு இறுதியிலிருந்தே நிலைமை தலைகீழாக மாற ஆரம்பித்து, 2008- ஆம் ஆண்டிலிருந்து மின் பற்றாக்குறை தமிழகம் முழுவதும் தலைவிரித்து ஆட ஆரம்பித்தது.
அரசு எடுத்த நடவடிக்கைகள்: மூன்றாவது முறையாக தமிழக முதல்வராக பொறுப்பேற்றவுடன் மின் பற்றாக்குறையைச் சமாளிக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்தேன். 600 மெகாவாட் திறனுடைய மேட்டூர் அனல் மின் திட்டம், வட சென்னை அனல் மின் நிலையத் திட்டத்தின் நிலை-2ன் முதல் அலகு (300 மெகாவாட்) ஆகியவற்றின் மூலம் மின்சாரம் தொடர்ந்து கிடைத்து வருகிறது. டிசம்பர் முதல் 600 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும்.
600 மெகாவாட் திறனுடைய வடசென்னை அனல் மின் நிலைய நிலை 2-ன் மூலம் 350 முதல் 450 மெகாவாட் மின் உற்பத்தி கிடைக்கிறது. அடுத்த மாத இறுதியில் முழு அளவில் மின்சாரம் கிடைக்கும். வட சென்னை வல்லூரில் 500 மெகாவாட் திறனுடைய மூன்று அலகுகளில் இரண்டு அலகுகள் உற்பத்தியைத் தொடங்கியுள்ளன. மூன்றாவது அலகு அடுத்த ஆண்டு மே முதல் உற்பத்தியைத் தொடங்கும்.
புதிய அனல் மின் திட்டங்கள் உற்பத்தியைத் தொடங்கியுள்ளதன் மூலம் இப்போது கூடுதலாக ஆயிரத்து 700 மெகாவாட் மின்சாரம் கிடைத்து வருகிறது. இதைத் தவிர மத்திய கால அடிப்படையில் மூன்று ஆண்டுகளுக்கு 500 மெகாவாட் மின்சாரம் இந்த ஆண்டு ஜூன் முதல் பிற மாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.
மின்வெட்டே இல்லாத நிலை: தமிழக அரசு எடுத்த சீரிய முயற்சியால் மேலும் 3 ஆயிரத்து 330 மெகாவாட் மின்சாரம் நீண்ட கால அடிப்படையில் 15 ஆண்டுகளுக்கு கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் பெருமளவு சத்தீஸ்கர் மற்றும் ஒடிஸா மாநிலங்களிலிருந்து பெறப்படும்.
புதிதாக அமைக்கப்பட்டுள்ள மின் வழித் தடங்கள் செயல்பாட்டுக்கு வரும் நிலையில் நாம் கொள்முதல் செய்துள்ள மின்சாரத்தை முழுமையாகப் பெற முடியும். இந்த ஆண்டு பருவமழை சிறப்பாக இருக்கும் காரணத்தால் நீர்மின் உற்பத்தி நிலையங்கள் மூலமான மின் உறபத்தியும் அதிகரித்துள்ளது.
திமுக ஆட்சியில் அறிவிக்கப்படாத மின்வெட்டு என்றிருந்த நிலைமை மாறி, இப்போது அறிவிக்கப்பட்ட மின்வெட்டும் நடைமுறைப்படுத்தாத நிலை ஏற்பட்டுள்ளது.
ஓர் எச்சரிக்கை உணர்வுடன் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்பதற்காகவும், வாக்குறுதி கொடுத்து விட்டு தவறிவிடக் கூடாது என்பதற்காகவும் மின்வெட்டு இருக்கும் எனச் சொல்கிறோம். ஆனால், மின்வெட்டே இல்லாமல் மின்சாரத்தை கொடுத்துக் கொண்டு இருக்கிறோம்.
எனவே, வெகு விரைவில், மிக விரைவில் தமிழகம் மின் மிகை மாநிலமாக ஆக்கப்படும். மின்சார உற்பத்தியில் இப்போது 99 சதவீதம் சாதித்து விட்டோம். இன்னும் ஒரு சதவீதம் தான். இந்த ஆண்டு இறுதிக்குள் அதையும் சாதித்து விடுவோம் என்றார் முதல்வர் ஜெயலலிதா.

 

No comments:

Post a Comment