Tuesday 12 November 2013

ஈழத் தமிழர் படுகொலைக்குக் காரணமான காங்., தி.மு.க.வை மன்னிக்க மாட்டோம்



ஈழத் தமிழர் படுகொலைக்குக் காரணமான காங்கிரஸ் மற்றும் திமுக கூட்டணிக் கட்சிகளை மன்னிக்க மாட்டோம் என மதிமுக பொதுச் செயலர் வைகோ கூறினார்.
இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்பதைக் கண்டித்தும், காமன்வெல்த் அமைப்பைக் கண்டித்தும் மதுரையில் வைகை எக்ஸ்பிரஸ் ரயில் எஞ்ஜின் முன் நின்று மறியலில் ஈடுபட்ட வைகோ செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஈழத் தமிழரைக் கொன்றதன் மூலம் சர்வதேச குற்றவாளியாக இலங்கை அதிபர் குற்றச்சாட்டுக்கு ஆளான நிலையில், அங்கு காமன்வெல்த் மாநாட்டை நடத்துவது சரியல்ல. ஆனால், அங்கு மாநாடு நடத்துவதன் மூலம் சர்வதேச குற்றவாளியான ராஜபட்சவைத் தண்டனையிலிருந்து காப்பாற்றும் முயற்சியாக இந்தியாவே மறைமுகமாக மாநாட்டை நடத்துகிறது. பிரதமர் பங்கேற்காவிட்டாலும், அவரது அமைச்சர் பங்கேற்கிறார். ஜனநாயக மரபை மீறியதாக நைஜீரியா, பாகிஸ்தான், உகாண்டா, தென்னாப்பிரிக்கா, பிஜி தீவு ஆகியவை காமன்வெல்த் அமைப்பிலிருந்து நீக்கப்பட்டன. ஆனால், பல லட்சம் தமிழர்களைப் படுகொலை செய்த இலங்கை நீக்கப்படவில்லை.
தென்னாப்பிரிக்காவில் நெல்சன் மண்டேலாவுக்கு நிகராகப் போராடிய நோபல் பரிசு பெற்ற லெஸ்பின்டிட்டோ, காமன்வெல்த் மாநாட்டை அனைத்து நாடுகளும் புறக்கணித்தால் ஈழத் தமிழருக்கு நீதி கிடைக்கும் என்கிறார்.
ஈழப் போரின்போது இந்திய அரசு இலங்கைக்கு ஆயுத உதவி அளித்தது. அப்போது காங்கிரஸ் கூட்டணி அரசில் தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றிருந்தன.
இக் கட்சிகளை ஒருபோதும் மன்னிக்க மாட்டோம்.
காமன்வெல்த் மாநாடு நடப்பதால், ஈழத் தமிழர் பிரச்னை முடிந்துவிடாது. தமிழகத்தில் உள்ளோர் சாதி, மதம் பாராமல் தொடர்ந்து போராடுவோம்.
தமிழகத்தில் முள்ளிவாய்க்கால் முற்றத்தை அகற்ற அதிமுக அரசு நீதிமன்றத்தில் மனுச் செய்தது கண்டிக்கத்தக்கது. அதிமுக அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றிய தீர்மானமும் முழுமையானதல்ல. இலங்கையில் தமிழ் ஊடகவியலாளர் இசைப்பிரியா கொலை குறித்து மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் நான்கு ஆண்டுக்குப் பிறகு கருத்தைத் தெரிவித்துள்ளார். இதுவரை அவர் எங்கிருந்தார்? இலங்கை தமிழர் படுகொலை குறித்த குறுந்தகடை கேலி செய்தவர்தான் கருணாநிதி என்றார்.
முன்னதாக, ரயில் நிலைய மேற்கு நுழைவுவாயிலில் இருந்து கட்சியினருடன் தண்டவாளம் வழியாக 2-வது பிளாட்பாரத்துக்கு வந்த வைகோ, போலீஸ் தடையை மீறி வைகை எக்ஸ்பிரஸ் எஞ்ஜின் முன் தண்டவாளத்தில் நின்றார். போலீஸார் தடுத்தும் வைகோ கட்சியினருடன் ரயில் முன்வந்தார். பின் மத்திய காங்கிரஸ் அரசையும், சோனியா காந்தி, மன்மோகன் மற்றும் காமன்வெல்த் அமைப்பையும் கண்டித்து கோஷம் எழுப்பினார்.
காலை 6.20 மணிக்கு தண்டவாளத்தில் நின்ற வைகோவை 6.40 மணிக்கு கைது செய்ய போலீஸார் வந்தனர். உடனே, அவர், உங்களிடம் தமிழ் ரத்தம்தானே ஓடுகிறது சிங்களவரிடமா ஊதியம் பெறுகிறீர்கள்? எனக் கடிந்து கொண்டார்.
பின்னர் தொடர்ந்து ரயில் முன் நின்று கோஷம் எழுப்பினார். அதன்பின், காலை 7.20 மணிக்கு அவரை மாநகர் துணை ஆணையர் தமிழ்ச்சந்திரன் தலைமையிலான போலீஸார் கைது செய்வதாகக் கூறி அழைத்துச் சென்றனர். அரசு டவுன் பஸ்ஸில் தொண்டர்களுடன் ஏறிச்சென்றார்.
இதையடுத்து, மதிமுக மாநகர் மாவட்டச் செயலர் புதூர் மு.பூமிநாதன் தலைமையிலும், அவைத் தலைவர் சின்னச்செல்லம் தலைமையிலும் மறியலுக்கு முயன்று கைதாயினர். மதிமுக ரயில்வே தொற்சங்கத்தினர் மணி தலைமையில் கைதாயினர். மறியலில் ஈடுபட்டு 3 பெண்கள் உள்ளிட்ட 331 பேர் கைது செய்யப்பட்டு, தமுக்கம் மைதானத்தில் தங்க வைக்கப்பட்டனர். பின்னர், அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

website:www.dinamani.com

No comments:

Post a Comment